விற்பனைக்கு காத்திருக்கும் வீட்டுமனைகள் புது திட்டம் அறிவிக்க நிறுவனங்கள் தயக்கம்
விற்பனைக்கு காத்திருக்கும் வீட்டுமனைகள் புது திட்டம் அறிவிக்க நிறுவனங்கள் தயக்கம்
ADDED : மார் 08, 2025 12:28 AM
சென்னை:தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில், வரன்முறை நடவடிக்கைகளுக்கு பின், 10 லட்சம் வீட்டு மனைகள் விற்பனைக்கு காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், புதிய மனைப்பிரிவு திட்டங்களை அறிவிக்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தயங்குகின்றன.
தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி காரணமாக, வீடு, மனைகள் வாங்குவதில், மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதனால், ஆண்டுதோறும் புதிதாக மனைப்பிரிவு மற்றும் வீடு கட்டும் திட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
பல்வேறு கேள்வி
'பிராப் ஈக்வுட்டி' என்ற நிறுவனம், சமீபத்தில் வெளியிட்ட சந்தை நிலவர ஆய்வு அறிக்கையில், சென்னையில் 2023ல், 13,852 வீடுகள் கட்டுவதற்கான திட்டங்கள் வந்த நிலையில், 2024ல், 12,743 வீடுகளுக்கான திட்டங்கள் தான் வந்துள்ளன.
இது, புதிய திட்டங்கள் வருகையில், 13 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இதேபோன்று, தமிழகத்தில் குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே, புதிதாக வீட்டுமனை திட்டங்களை அறிவிக்கின்றன.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புதிய திட்டங்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
புதிதாக மனை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ள நிலையில், திட்டங்கள் வருகை சரிந்துள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதில் என்ன பிரச்னை என்பதை ஆராய வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுதும் புதிய வீட்டுவசதி திட்டங்களின் வருகை குறைந்துள்ளது. தேசிய அளவில், ரியல் எஸ்டேட் ஆணையங்களில் பதிவாகும் திட்டங்கள் எண்ணிக்கையில், 20 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் காணப்படுகிறது.
தற்போதைய சூழலில், பெரும்பாலான நிறுவனங்கள், ஏற்கனவே அறிவித்த திட்டங்களில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துகின்றன.
ஆர்வமில்லை
தமிழகத்தில், 2017ல் அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மனைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த மனைகளை, பல்வேறு சலுகைகளுடன் விற்பதிலேயே, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.
இதனால், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதிய திட்டங்களை அறிவிப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளன.
நடைமுறையில் பல்வேறு நிலைகளில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவும், இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.