கொடைக்கானலில் பொதுப்பாதை, நீரோடையை ஆக்கிரமித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்
கொடைக்கானலில் பொதுப்பாதை, நீரோடையை ஆக்கிரமித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்
ADDED : ஜூன் 15, 2024 11:35 PM

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து, பொதுப்பாதையை மறித்துள்ளதாக பாரதிய கிஷான் மாநில செயலர் அசோகன் புகார் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறை ஓரவி அருவி அருகே நடிகர் பிரகாஷ்ராஜ் தோட்டம் உள்ளது. இதில், அனுமதியின்றி வீடு கட்டியது தொடர்பாக, 2023 ஆகஸ்டில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டது.
வருவாய்த் துறை, ஊராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தியதில், பிரகாஷ்ராஜ் வீடு கட்ட முறையான அனுமதி பெறாதது தெரிய வந்ததையடுத்து, ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.
சோலார் வேலி
இதனிடையே, தற்போது பிரகாஷ்ராஜ் வீடு அருகே உள்ள வரங்காட்டு ஓடையை ஆக்கிரமித்து, சதுப்பு நிலத்தில் வீடு கட்டியுள்ளார் என்றும், விவசாயிகள் சென்று வரும் பொதுப்பாதையில் சோலார் மின்வேலி அமைத்து, மறித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
பாரதிய கிஷான் சங்க மாநில செயலர் அசோகன் கூறியதாவது:
பிரகாஷ்ராஜ் வீடு கட்டியுள்ள இடம் சதுப்பு நிலப்பகுதி. இதில், 600 சதுரடி அளவிற்கு மட்டுமே வீடு கட்ட முடியும்.
இருந்தபோதும், 2,000 சதுரடிக்கு மேல் அனுமதியின்றி, வீடு கட்டி உள்ளார். வீடு அருகே உள்ள வரங்காட்டு ஓடையையும் ஆக்கிரமித்துள்ளார். தோட்ட நுழைவாயில் பொதுப்பாதையை மறித்து, அதில் சோலார் மின்வேலி அமைத்துள்ளார். இந்த பாதை, பேத்துப்பாறை வயல்வெளி, பாரதி அண்ணா நகர் இடையான பொதுப்பாதையாகும். இப்பாதையை பகலில் திறந்து விடுகின்றனர். இரவில் அடைக்கின்றனர். இதனால், விவசாயிகள் பயிர்களை பார்வையிட செல்ல முடியவில்லை.
நிலங்களை வனவிலங்குகள் அழிக்காதவாறு பாதுகாவல் செய்யும் பணிக்கும், விவசாயிகள் செல்ல முடியவில்லை. சதுப்பு நிலத்தை இயந்திரங்கள் கொண்டு மட்டப்படுத்தியும் விதிமீறல் செய்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நோட்டீஸ்
வில்பட்டி ஊராட்சி தலைவர் பாக்யலட்சுமி கூறுகையில், ''அனுமதியின்றி வீடு கட்டியது தொடர்பாக பிரகாஷ்ராஜூக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தரப்பில் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக கூறி உள்ளனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் கூறுகையில், ''பிரகாஷ்ராஜ் வீடு கட்டியது தொடர்பாக, ஊராட்சி வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மற்றபடி ஓடை ஆக்கிரமிப்பு, பொதுப்பாதை மறித்துள்ள புகார் குறித்து வருவாய்த்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அளவீடு செய்யப்படும்
தாசில்தார் கார்த்திகேயன் கூறுகையில், ''நடிகர் பிரகாஷ்ராஜ் பேத்துப்பாறை பகுதியில் பொதுப்பாதையை மறித்துள்ளது, ஓடை ஆக்கிரமிப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் புகார் கடிதம் அளிக்கும் பட்சத்தில் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்கப்படும். ஓடை ஆக்கிரமிப்பு வருவாய்த்துறை வசம் வரும் பட்சத்தில், நோட்டீஸ் வழங்கப்படும்,'' என்றார்.

