கோவில் நிதியில் முறைகேடு புகார் நிர்வாக அதிகாரியின் விருப்ப ஓய்வு ரத்து
கோவில் நிதியில் முறைகேடு புகார் நிர்வாக அதிகாரியின் விருப்ப ஓய்வு ரத்து
ADDED : ஜூன் 28, 2024 02:32 AM
சென்னை: கோவில் நிதியில் முறைகேடு செய்ததாக, புகாருக்கு ஆளான நிர்வாக அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அறநிலைய துறையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் முத்துசாமி; கோவில் நிதியில், 1.37 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, இவருக்கு எதிராக புகார் எழுந்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கு முன், விருப்ப ஓய்வு அளிக்கக்கோரி, அறநிலைய துறை ஆணையருக்கு விண்ணப்பித்தார்; ஆணையர் நிராகரித்தார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் முத்துசாமி மனுத்தாக்கல் செய்தார். விருப்ப ஓய்வு கேட்ட விண்ணப்பத்தை, மூன்று மாதங்களுக்குள் நிராகரிக்காமல், குறிப்பிட்ட நாட்களை கடந்து நிராகரித்திருப்பதாக மனுவில் கூறப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பணியில் இருந்து முத்துசாமி ஓய்வு பெற்றதாக கருதும்படி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அறநிலையதுறை செயலர், ஆணையர் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு விசாரித்தது.
அறநிலைய துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, “மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பது தவறு,” என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
விருப்ப ஓய்வு கேட்ட விண்ணப்பத்தை நிராகரிக்கும் முடிவை, 2020 நவம்பர் 5ம் தேதி, ஆணையர் எடுத்திருப்பது கோப்புகளில் இருந்து தெரிகிறது. நவம்பர் 12ம் தேதி, அதன் நகல் ஆணையர் தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்வு கேட்ட விண்ணப்பம் பெறப்பட்ட தேதியான 2020 ஆகஸ்ட் 13ல் இருந்து கணக்கிட்டால், நவம்பர் 12ல் மூன்று மாதம் முடிகிறது. எனவே, விதிகளின்படி, குறிப்பிட்ட கால வரம்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும், குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை முடிந்த உடனே, தனக்கு சுய விருப்ப ஓய்வு வழங்கும்படி, முத்துசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்கவில்லை என, தனி நீதிபதி கூறியிருப்பது தவறு. அதனால், தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆறு மாதங்களுக்குள் விசாரணை நடவடிக்கையை, அதிகாரி முடிக்க வேண்டும். விசாரணைக்கு முத்துசாமி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

