தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்த பி.ஆர்.ஓ., மீது புகார் மனு
தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்த பி.ஆர்.ஓ., மீது புகார் மனு
ADDED : ஏப் 18, 2024 12:05 AM
சென்னை:'தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திவாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் பாபுமுருகவேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், கடிதம் கொடுத்துள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
தி.மு.க., அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறி, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திவாகர், தி.மு.க., அரசின் சாதனைகள் மற்றும் தி.மு.க., நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை, அரசு செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளார்.
தன் 'இ - மெயில்' முகவரியில் இருந்து, பத்திரிகைகளுக்கு அனுப்பி உள்ளார்.
மேலும் வடசென்னை தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமி, 75 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார் என தெரிவித்து உள்ளார்.
அவரது வாட்ஸாப் குரூப்பில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு சாதனைகளை பகிர்ந்துள்ளார்.
இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

