அ.தி.மு.க., நிர்வாகி மகன் மீது தாக்குதல் இன்ஸ்பெக்டர் மீது டி.ஜி.பி.,யிடம் புகார்
அ.தி.மு.க., நிர்வாகி மகன் மீது தாக்குதல் இன்ஸ்பெக்டர் மீது டி.ஜி.பி.,யிடம் புகார்
ADDED : ஏப் 24, 2024 09:05 PM
சென்னை:'ஒருதலை பட்சமாக செயல்பட்டு, அ.தி.மு.க., நிர்வாகியின் மகன்மீது தாக்குதல் நடத்திய, போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான இன்பதுரை நேற்று, டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்த புகார்:
தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, ஏப்.,19ல் நடந்தது. அன்று, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோணுளாம்பள்ளம் ஓட்டுச்சாவடியில், எங்கள் கட்சியைச் சேர்ந்த உலகநாதன், பூத் ஏஜன்டாக செயல்பட்டார். அவர் மீது, பா.ம.க.,வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
அவரை, எங்கள் கட்சியின் ஒன்றிய செயலர் மகன் சண்முக ராஜேஸ்வரன் மீட்டு, கோணுளாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார். முதலுதவிக்கு பின், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்சிற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த பா.ம.க.,வினர், உலகநாதன் மற்றும் சண்முக ராஜேஸ்வரனை தாக்க முயன்றனர்.
இதனால், இருவரும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்து, தாழ்ப்பாள் போட்டுக் கொண்டனர். அங்குவந்த போலீசார், பா.ம.க.,வினர் உள்ளிட்ட கும்பலை கலைத்துவிட்டு, எங்கள் கட்சியினரை மீட்டனர். இந்த காட்சிகள், 'சிசிடிவி'யில் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், பந்தநல்லுார் காவல் நிலைய போலீசார், இரு தரப்பினரிடமும் புகார் பெற்று, பாதிக்கப்பட்ட எங்கள் கட்சியினர் மீது, உள்நோக்கத்துடன் ஜாமினில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். தாக்குதல் நடத்திய, பா.ம.க.,வினர்மீது, சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
ஏப்.,21ம் தேதி, பந்தநல்லுார் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணராஜா, சண்முக ராஜேஸ்வரன் வீட்டிற்கு சென்று, முகத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி, இழுத்துச் சென்று, கைது செய்ய முயன்றுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, காயங்களை பார்த்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்குமாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது கும்பகோணம் அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். எதற்காக, சண்முக ராஜேஸ்வரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினீர்கள் என, இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோது, திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ஜாபர் சாதிக் உத்தரவின்படி, நான் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தி சட்டம், ஒழுங்கை சீர்குலைத்த பா.ம.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்காமல், இன்ஸ்பெக்டர் ஒருதலை பட்சமாக செயல்பட்டு, எங்கள் கட்சியினர் மீது வழக்குப் பதிந்துள்ளார். சண்முக ராஜேஸ்வரனை கடுமையாக தாக்கி, ரத்தக்காயம் ஏற்படுத்திய அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

