புகார்கள் மீது கட்டாய நடவடிக்கை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு
புகார்கள் மீது கட்டாய நடவடிக்கை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : ஆக 18, 2024 01:25 AM
சென்னை:பொதுமக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துஉள்ளார்.
சென்னை மாநகராட்சியில் சாலை சேதம், குப்பை தேக்கம், கொசு தொல்லை, நாய் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, '1913' என்ற கட்டுப்பாட்டு மையத்தில், பொது மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
ஒரு சில புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பல இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், அனைத்து அதிகாரிகளுக்கும், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் அனுப்பியுள்ள எச்சரிக்கை:
மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் பெறப்படும் புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பின் தான், புகாரை முடித்து வைக்க வேண்டும். அப்பணிகளை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்வர்.
நேற்று முன்தினம், 1,000 புகார்கள் பெறப்பட்ட நிலையில், 180 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமலேயே முடித்து வைக்கப்பட்டு உள்ளன.
இவை, ஆரம்ப நிலை என்பதால், எச்சரிக்கையுடன் விடப்படுகிறது. வரும் காலங்களில், 1913 கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்படும் புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அவற்றை முடித்து வைக்க வேண்டும்.
இது போன்ற புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தினால் தான், பொது மக்களின் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். எனவே, வட்டார கமிஷனர்கள், மண்டல அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்டோர், மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் சுணக்கம் காட்டக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

