பா.ம.க., பிரமுகர் கொலை வழக்கு 9 பேருக்கு நிபந்தனை ஜாமின்
பா.ம.க., பிரமுகர் கொலை வழக்கு 9 பேருக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : மே 25, 2024 02:05 AM
சென்னை:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பா.ம.க., பிரமுகர். ஹிந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்ட இவர், திருபுவனம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நடந்த மதமாற்றத்தை தட்டிக் கேட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த நிலையில், 2019 பிப்., 5ம் தேதி, ராமலிங்கம் வெட்டி கொலை செய்யப்பட்டார். திருவிடைமருதுார் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, திருவிடைமருதுார், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 18 பேர் சதித்திட்டம் தீட்டி, ராமலிங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.
இதன் பின்னணியில், பயங்கரவாதிகளின் தொடர்பு இருப்பதால், தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை, பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் ஜாமின் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதில், முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி, முகமது ரிஸ்வான், தவ்ஹித் பாட்ஷா, முகமது பர்வேஸ், முகமது தவுபிக், முகமது பருக், மொய்தீன் அகமது உட்பட ஒன்பது பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து ஏழு பேர், புழல் மத்திய சிறையில் இருந்து இரண்டு பேர் என, ஒன்பது பேர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள், தினமும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; சென்னையில் தங்கி இருக்க வேண்டும்; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளின்படி, ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

