மறைந்த முன்னாள் அமைச்சரின் சொத்து பறிமுதல் உத்தரவு உறுதி
மறைந்த முன்னாள் அமைச்சரின் சொத்து பறிமுதல் உத்தரவு உறுதி
ADDED : ஜூலை 06, 2024 02:08 AM
சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில்,அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் சொத்து பறிமுதல் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
அவர் காலமாகி விட்டதால், சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு உறுதியாகி உள்ளது.
வழக்குப்பதிவு
கடந்த, 1991 - 1996ல், முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், கல்வி அமைச்சராக அரங்கநாயகம் பதவி வகித்தார்.
மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் பெயரிலும், தன் பெயரிலும், வருமானத்துக்கு அதிகமாக, 1.15 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இவ்வழக்கில், 2006ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்தது; அவரது மனைவி மற்றும் மகன்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பு, 2017 ஏப்ரலில் அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் அரங்கநாயகம் மேல்முறையீடு செய்தார். அவரது மனைவி, மகன்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது, 2021ல் அரங்கநாயகம் காலமானார்.
தள்ளுபடி
மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமாகி விட்டதால், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரங்கநாயகத்தின் மனைவி மற்றும் மகன்கள் விடுதலையை எதிர்த்த லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார்.