ADDED : ஜூலை 10, 2024 10:14 PM
சென்னை:திருச்சியில், ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோவுக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிய வீடியோ அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவி வருகிறது.
தி.மு.க., சட்டத்துறை சார்பில், மத்திய அரசின் மூன்று சட்டங்களை எதிர்த்து, கடந்த 6ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில், ம.தி.மு.க., பங்கேற்காமல் புறக்கணித்தது. இதனால், தி.மு.க., கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறுகிறதா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், திருச்சி தொகுதியில் வெற்றி பெற்றதற்காக, வாக்காளர்களுக்கு நன்றி செலுத்த துரை வைகோ, கடந்த 8ம் தேதி சென்று கொண்டிருந்தார். குழித்துறை அருகே, புதிய சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு, துரை வைகோ சென்றார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் சிலர், துரை வைகோவிடம், 'பார்லிமென்டில் எதுவும் பேசாமல், இங்கு மட்டும் ஏன் பேச வந்தீர்கள்?' என, கேள்வி எழுப்பினர்.
இதனால், ஆவேசமடைந்த துரை வைகோ, வழக்கறிஞர்களிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது வழக்கறிஞர்களும், கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். ம.தி.மு.க.,வினர் வெளியேறுமாறு, வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பவே, அங்கிருந்து துரை வைகோவும், அவரது கட்சியினரும் புறப்பட்டு சென்றனர்.

