நில வழிகாட்டி மதிப்பில் குழப்பம் கட்டட அனுமதி பணி முடக்கம்
நில வழிகாட்டி மதிப்பில் குழப்பம் கட்டட அனுமதி பணி முடக்கம்
ADDED : ஏப் 30, 2024 03:39 AM
சென்னை : எந்த வழிகாட்டி மதிப்பை கடைப்பிடிப்பது என்ற குழப்பம் காரணமாக, அடுக்குமாடி கட்டடங்களுக்கான பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணங்களை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதி தாமதமாவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், 2012ல் நிர்ணயிக்கப்பட்ட நில வழிகாட்டி மதிப்புகளை கடைப்பிடிக்கலாம் என பதிவுத் துறை 2023ல் அறிவித்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பதிவுத்துறை உத்தரவுக்கு தடை விதித்தது. இதையடுத்து, வீடு, மனை விற்பனைக்கான பத்திரத்தை பதிவு செய்யும் போது, எந்த வழிகாட்டி மதிப்பை கடைப்பிடிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதே பிரச்னையால், அடுக்குமாடி கட்டுமான திட்ட அனுமதி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நகர், ஊரமைப்பு சட்டப்படி, நிலத்தின் பரப்பளவில் இரண்டு மடங்கு அளவுக்கு கட்டடங்கள் கட்ட அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, 3.5 முதல், 5 மடங்கு வரை கட்டட பரப்பளவை அதிகரிக்க அனுமதி கோரப்படுகிறது.
இதற்காக, பிரீமியம் எப்.எஸ்.ஐ., எனப்படும், கட்டண அடிப்படையிலான கூடுதல் தளபரப்பு குறியீட்டை அனுமதிக்கும் நடைமுறை உள்ளது.
இதன்படி, கூடுதல் தளபரப்புக்கு அனுமதி கோருவோர், அதற்கு இணையாக நிலத்தின் வழிகாட்டி மதிப்பில், 40 சதவீத தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.
அடுக்குமாடி திட்ட அனுமதி கோப்புகள் ஆய்வு முடியும் போது, இதற்கான கடிதம் வழங்கப்படும்.
இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகிகள் கூறியதாவது:
நீதிமன்ற தடையால் எந்த வழிகாட்டி மதிப்பை கடைப்பிடிப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இதனால், வீடு விற்பனைக்கான பத்திரங்கள் பதிவாகாமல் காத்திருக்கின்றன.
அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கான பிரீமியம் எப்.எஸ்.ஐ.,க்கான கட்டணங்களை முடிவு செய்வதிலும், எந்த வழிகாட்டி மதிப்பை கடைப்பிடிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், பதிவுத்துறை இணையதளத்தை சுட்டிக்காட்டி புதிய மதிப்பை கடைப்பிடிக்க முன்வருகின்றனர்.
விண்ணப்பதாரர்கள் எதிர்ப்பால், இதன் அடிப்படையில் பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணங்களை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னையால், அடுக்குமாடி கட்டுமான அனுமதி தாமதமாவதால், வீடு வாங்குவோர் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

