முரண்பாடான கூட்டணியால் மத்தியில் பா.ஜ., ஆட்சி 5 ஆண்டுகள் தொடராது சொல்கிறார் காங்., இளங்கோவன்
முரண்பாடான கூட்டணியால் மத்தியில் பா.ஜ., ஆட்சி 5 ஆண்டுகள் தொடராது சொல்கிறார் காங்., இளங்கோவன்
ADDED : ஜூன் 10, 2024 04:49 AM
மதுரை : ''முரண்பாடான கூட்டணியால் மத்தியில் பா.ஜ., ஆட்சி 5 ஆண்டுகள் தொடராது. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்குள் அக்கட்சி காணாமல் போய்விடும்,'' என, மதுரையில் காங்., மூத்த தலைவர் இளங்கோவன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழக்க வைத்து மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். ஆட்சியை தக்க வைக்க நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு போன்றோருடன் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.
நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஜாதிவாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட பா.ஜ.,வின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள். இருவருமே அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களிடம் பணப்பேரம் மூலம் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். இந்த முரண்பட்ட கூட்டணியால் 5 ஆண்டுகள் ஆட்சி தொடர வாய்ப்பில்லை.
பிரதமர் மோடி சர்வாதிகாரியாக நினைத்து இனியும் செயல்பட்டால் அவர்களது கூட்டணி கட்சிகள் துாக்கியெறிந்து விடும். கூட்டணி கட்சிகளால் மோடிக்கு ஆபத்து இருக்கிறதோ இல்லையோ, அவரது கட்சியில் உள்ளவர்களால் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., ஓட்டு வங்கி கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் அதிகரித்துள்ளது. அக்கட்சி வடக்கு மாவட்டங்களில் பெற்றது அனைத்தும் பா.ம.க., ஓட்டுகள். தமிழக பா.ஜ., தலைவர்களாக தமிழிசை, முருகன் இருந்தவரை அக்கட்சி வளர்ச்சியடைந்தது. அண்ணாமலை பொறுப்பேற்றதும் கட்சி வலுவிழந்து விட்டது.
'தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு' என அண்ணாமலை கூறுகிறார். அப்போது பா.ஜ.,வே இங்கு காணாமல் போய் விடும். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் போல் ஸ்டாலின் நல்லாட்சி நடத்துகிறார் என்பதில் மாற்றமில்லை. 'மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பது சாதனை' என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியது அவர் (இமய) மலைக்கு சென்று திரும்பியதால் அப்படி கூறுகிறார் என்றார். நகர் தலைவர் கார்த்திகேயன் உடனிருந்தார்.

