கலாட்டா இல்லாமல் காங்., கூட்டமா? ஐ.என்.டி.யு.சி., செயற்குழுவில் லகலக
கலாட்டா இல்லாமல் காங்., கூட்டமா? ஐ.என்.டி.யு.சி., செயற்குழுவில் லகலக
ADDED : பிப் 22, 2025 08:58 PM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நடந்த ஐ.என்.டி.யு.சி., மாநில செயற்குழு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பேனர்கள் கிழிக்கப்பட்டன.
ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் 252 வது மாநில செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மண்டல தலைவர் எஸ்.எஸ்.மணிகண்டன், செயலர் ஆதிமூலம் செய்தனர்.
இந்நிலையில் ஜெகநாதன் அணியினருக்கு எதிராக மாநில முன்னாள் பொதுச்செயலர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கருப்பையா, சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. தொடர்ச்சியாக அங்கிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
அப்போது நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விபரங்களை இரு தரப்பினரும் விளக்கினர். அதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பினரை அரங்கிலிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்பின் ஜெகநாதன் தலைமையில் கூட்டம் நடந்தது.
ஐ.என்.டி.யு.சி., தமிழக செயல் தலைவர் அருள்ஜோதி கூறியதாவது:
ஐ.என்.டி.யு.சி., அமைப்பிலிருந்து முன்னாள் பொதுச்செயலர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதற்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றார் பன்னீர்செல்வம். வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையே, 'மாநில செயற்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது; ரத்து செய்ய வேண்டும்' என, அவரது தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. கூடவே, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 பேர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கலாம் எனவும் அனுமதி அளித்தது.
அதன்படி, கூட்டத்தில் பங்கேற்க வந்த பன்னீர்செல்வம் தரப்பினர், தகராறு செய்தனர். இதனால், செயற்குழுவில் குழப்பம் ஏற்பட்டது. சங்கத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது மாநிலத் தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு சங்கம் முழுமையாக ஒத்துழைக்கும் என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.