அதிகாரிகளை மிரட்டிய காங்., எம்.எல்.ஏ., கடும் நடவடிக்கை தேவை: அண்ணாமலை
அதிகாரிகளை மிரட்டிய காங்., எம்.எல்.ஏ., கடும் நடவடிக்கை தேவை: அண்ணாமலை
ADDED : ஜூலை 31, 2024 09:40 PM
சென்னை:''அதிகாரிகளை மிரட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் மவுலானாமீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
வேளச்சேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, சென்னை வியாசர்பாடியில், அரசுக்கு சொந்தமான பொது வழியை ஆக்கிரமித்து வைத்துள்ளார். இவர், உயர் நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல், தலைமை செயலர் உத்தரவின்படி, ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மற்றும் மக்களை, அடியாட்கள் வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரை, வன்மையாக கண்டிக்கிறோம்.
பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து உள்ளதால், பொது மக்கள், 3 கி.மீ., சுற்றி செல்ல வேண்டியுள்ளது. வியாசர்பாடி பகுதி எம்.எல்.ஏ.,வான, ஆர்.டி.சேகருக்கு தெரியாமல், ஹசன் இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருக்கிறாரா; தன் தொகுதி மக்கள் நலனைவிட, கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏ., ஆக்கிரமிப்பு, சேகருக்கு முக்கியமானதாகி விட்டதா?
பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காகவும், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காகவும், ஹசன் மற்றும் அடியாட்கள் மீது, தமிழக அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவரது மற்றொரு அறிக்கை:
மேகதாது அணை தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சு நடத்தி தீர்வு காணுமாறு, பிரதமர் மோடி வலியுறுத்தியும், கர்நாடகா மாநில துணை முதல்வர் சிவகுமார், அதற்கு தயாராக இல்லை என, தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க., உடனே தங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைமையிடம் பேசி, மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.