ரூ.1,001 திரட்ட திண்டாட்டம் திட்டத்தை தள்ளிப்போடும் காங்.,
ரூ.1,001 திரட்ட திண்டாட்டம் திட்டத்தை தள்ளிப்போடும் காங்.,
ADDED : ஆக 29, 2024 12:26 AM
சென்னை:ரயில்வே துறையின் பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசு, 1,000 ரூபாய் ஒதுக்கியதை கண்டிக்கும் வகையில், ரயில்வே துறைக்கு, 1,001 ரூபாயை அனுப்பும் போராட்டம், கடந்த 23ம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் என, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
ஆனால், எந்த ஒரு மாவட்ட தலைவரும், 1,001 ரூபாய் அனுப்பி வைக்க முன்வரவில்லை என்பதால், அறிவித்த நாளில் போராட்டம் நடக்கவில்லை.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை '1,001 ரூபாய் திரட்ட காங்கிரசார் திண்டாடுவதால், போராட்டம் நடக்கவில்லையோ' என, கிண்டல் அடித்தார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சார்பில், 1,001 ரூபாய் நிதி ரயில்வே துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''தமிழக அரசுக்கு, நியாயமான முறையில், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. குறிப்பாக, ரயில்வே துறை திட்டங்களுக்கு, 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்கள், வட்டார தலைவர்கள், மக்களிடம் கையேந்தி, ஒரு ரூபாய் கூடுதலாக போட்டு, 1,001 ரூபாயை, ரயில்வே துறைக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம். தமிழகம் முழுதும் இந்த போராட்டம் தொடரும்,'' என்றார்.