ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ரயில்வே தொழிற்சங்கம் வரவேற்பு
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ரயில்வே தொழிற்சங்கம் வரவேற்பு
ADDED : ஆக 27, 2024 06:27 AM
சென்னை: ''ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வாயிலாக, ஊழியர்களின் கடைசி, 12 மாத அடிப் படை சம்பளத்தின் சராசரியில், 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும்,'' என, அகில இந்திய ரயில்வே சம்மேளன தலைவர் கண்ணையா தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, 50 சதவீதம் அடிப்படை சம்பளத்தை, டி.ஏ.,வுடன் ஓய்வூதியமாக பெற்று வந்த முறை, 2004 ஏப்ரல் 1 முதல் மாற்றப்பட்டது. அதன்பின், புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்துக்கு, எஸ்.ஆர்.எம்.யு., அகில இந்திய ரயில்வே சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், மற்ற மாநில அரசு ஊழியர்களும், ஜே.சி.எம்., நிலைக்குழுவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று, 20 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம்.
இறுதியாக கடந்த 24ம் தேதி புதுடில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இறுதிக்கட்ட பேச்சில், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்து, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது, எங்களின் 20 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி.
பழைய ஓய்வூதிய திட்டத்தின் நிலையை அடைய முயற்சிப்போம். தற்போது, ஒருங்கிணைந்த ஓய்வூதியதிட்டம் கொடுத்துள்ளனர்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தோருக்கு, 25 ஆண்டுகள் சேவை முடிந்து ஓய்வுபெறும் போது, அவர்களுக்கு கடைசி 12 மாத அடிப்படை சம்பளத்தின் சராசரியில், 50 சதவீதம் ஓய்வூதியமாக தரப்படும். இவர்களுக்கு மத்திய அரசு தரும் பங்களிப்பு தொகை, 14 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும்.
இந்த ஓய்வூதிய திட்டம் ஒரு நல்ல துவக்கம். சிலருக்கு வேறுபட்ட கருத்து இருக்கலாம். தொடர்ந்து, பல கட்ட நடவடிக்கை மேற்கொண்டு படிப்படியாக மாற்றுவோம்.
கடைசியில், பழைய ஓய்வூதிய திட்டம் என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு கொண்டு வருவோம். தற்போதுள்ள ஊழியர்களும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாற வழிவகை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
62,267 பேர் பயன்
மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், ரயில்வே ஊழியர்கள் உட்பட, 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர். தெற்கு ரயில்வேயில், மட்டும் 62,267 பேர் பயனடைவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.