வீட்டுவசதி வாரியத்துடன் கூட்டு ஒப்பந்தம்; ஓட்டம் பிடிக்கும் கட்டுமான நிறுவனங்கள்
வீட்டுவசதி வாரியத்துடன் கூட்டு ஒப்பந்தம்; ஓட்டம் பிடிக்கும் கட்டுமான நிறுவனங்கள்
ADDED : மார் 23, 2024 06:50 AM

சென்னை : தனியாருடன் இணைந்து, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் வீட்டுவசதி வாரியத் திட்டத்தில் இணைய, கட்டுமான நிறுவனங்கள் தயங்குவது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், பெரும்பாலான திட்டங்கள், வாரிய நிதியில் செயல்படுத்தப்பட்டு, தவணை முறையில் மக்களுக்கு வழங்கப்படும். குலுக்கல் வாயிலாக ஒதுக்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடு, மனைகள் ஒதுக்கப்படும்.
சில ஆண்டுகளாக, சுயநிதி என்ற அடிப்படையில் மக்களிடம் பணம் வாங்கி, அதை பயன்படுத்தி வீடுகளை வாரியம் கட்டி கொடுக்கிறது. இதில், கட்டுமான செலவு அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுவதால், வீடு வாங்க மக்கள் தயங்கும் நிலை ஏற்படுகிறது.
இருப்பினும், வாரிய பொறுப்பில் நடக்கும் கட்டுமான பணியின் தரம் குறித்த சந்தேகத்தாலும் வீடு வாங்க மக்கள் தயங்குகின்றனர்.
இந்நிலையில், வாரியத்திடம் இருக்கும் நிலத்தில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்து வீடு கட்டி விற்பனை செய்யும் கூட்டு ஒப்பந்தம் திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. தனியார் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதில் வாரியத்துடன் கை கோர்க்க தனியார் கட்டுமான நிறுவனங்கள் தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.

