மலைப்பகுதிகளில் கட்டுமானம் வேளாண் துறை என்.ஓ.சி., வேண்டாம்
மலைப்பகுதிகளில் கட்டுமானம் வேளாண் துறை என்.ஓ.சி., வேண்டாம்
ADDED : ஆக 20, 2024 04:21 AM
சென்னை: மலைப்பகுதி பாதுகாப்பு குழும எல்லையில், கட்டுமான திட்ட அனுமதி கோருவோர், வேளாண் பொறியியல் துறையின் தடையின்மை சான்றிதழ் பெறுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில், 16 மாவட்டங்களில், 43 தாலுகாக்களில் உள்ள 597 கிராமங்கள், மலைப்பகுதி பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இப்பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி கோருவோர், பல்வேறு துறைகளிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும்.
குறிப்பாக, வேளாண் பொறியியல், சுரங்கம், புவியியல், வனம் உள்ளிட்ட துறைகளிடம் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இதில், வேளாண் பொறியியல் துறை, சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆகியவை, ஒரே மாதிரியான விபரங்களை ஆய்வுசெய்து, தனித்தனியாக தடையின்மை சான்றிதழ் வழங்குகின்றன.
இதனால், சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆய்வு மட்டும் போதும்; வேளாண் பொறியியல் துறையின் தடையின்மை சான்றிதழ் பெறுவதில் விலக்கு அளிக்கலாம் என, நகர், ஊரமைப்பு துறை அரசிடம் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்று, மலைப்பகுதிகளில் கட்டுமான திட்ட அனுமதி கோருவோர், தடையின்மை சான்றிதழ் பெற வேண்டிய பட்டியலில் இருந்து வேளாண் பொறியியல் துறையை நீக்க, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை ஒப்புதல் அளித்து உள்ளது.

