அரசு கட்டடம் கட்டும் பணி பொதுப்பணி துறைக்கு மட்டுமே
அரசு கட்டடம் கட்டும் பணி பொதுப்பணி துறைக்கு மட்டுமே
ADDED : ஜூலை 12, 2024 02:51 AM
சென்னை:'அரசு துறைகளுக்கான கட்டுமான பணிகளை, பொதுப்பணித்துறை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.
அரசு கட்டடங்கள் கட்டும் பணிக்கு, பொதுப்பணித்துறை வாயிலாக, 12 சதவீத சென்டேஜ் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.இந்த செலவை குறைக்கும் வகையில், பல துறைகள் தன்னிச்சையாக கட்டுமான பணிகளை மேற்கொள்வது, அ.தி.மு.க., ஆட்சியில் அதிகரித்தது. பொதுப்பணித்துறை வாயிலாக மட்டுமே, பல்வேறு துறைகளின் கட்டடங்களை கட்டுவதற்கு, 1990ல் கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணை கிடப்பில் போடப்பட்டது.
இப்பிரச்னையை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உயர் அதிகாரிகள் கொண்டு சென்றனர். உடன், முதல்வர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து ஆராயப்பட்டது. அதன்படி, பல்வேறு துறைகளுக்கான அரசு கட்டடங்களை, இனி வரும் காலங்களில் பொதுப்பணித்துறை மட்டுமே கட்ட வேண்டும் என, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
கட்டுமான பணிகளுக்கான சென்டேஜ் கட்டணம், 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கட்டங்களுக்கு, தனியார் கட்டட கலைஞர்களை நியமித்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்து உள்ளார்.

