'எம் சாண்ட்' விலை உயர்வால் கட்டுமான பணிகள் முடக்கம்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அவதி
'எம் சாண்ட்' விலை உயர்வால் கட்டுமான பணிகள் முடக்கம்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அவதி
ADDED : மார் 01, 2025 01:02 AM

சென்னை: கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள, 'எம் சாண்ட்' விலையை, குவாரி உரிமையாளர்கள் அடாவடியாக உயர்த்தி உள்ளதால், தமிழகம் முழுதும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, 3,000க்கும் மேற்பட்ட இடங்களில், கருங்கல் குவாரிகள் தனியார் நிலங்களில் செயல்படுகின்றன. இதை சார்ந்து, அரசு அனுமதியுடன், 430 எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.
தமிழகத்தில் நடக்கும் கட்டுமான பணிகளின் மொத்த தேவையில், 60 சதவீத அளவுக்கு தான் இங்குள்ள ஆலைகளால் பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
எம் சாண்டுக்கு சந்தையில் நிலவும் பற்றாக்குறையை பயன்படுத்தி, கல் உடைக்கும் கிரஷர்களை நடத்தும் சிலர், கருங்கல் துகள்களை முறையாக சுத்தப்படுத்தாமல், எம் சாண்ட் என்று கூறி விற்கின்றனர்.
கடந்த ஜனவரி மாத இறுதியில், கரூர், திருச்சி, சிவகங்கை, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், எம் சாண்ட் விலையை உயர்த்தி, குவாரி உரிமையாளர் சங்கங்கள்அறிவித்தன.
அப்போதே, கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் இருந்ததால், இந்த விலை உயர்வு, தற்போது தமிழகம் முழுதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதனால், கட்டுமான பணிகளை தொடர முடியாத அளவுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
விலை உயர்வு
கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
பொதுவாக, கோடை காலம் துவங்கும் போது, கட்டுமான பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த சமயத்தில், எம் சாண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான தேவையும் கூடும். இதை கருத்தில் வைத்து, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச விலை உயர்வு இருக்கும்.
தற்போது, எந்த அடிப்படை காரணமும் இன்றி, எம் சாண்ட், பி சாண்ட், கருங்கல் ஜல்லி போன்றவற்றின் விலை வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. குவாரி உரிமையாளர்களின் இந்த அடாவடி போக்கை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கின்றனர்.
கட்டுமான பணிக்கான எம் சாண்ட், 100 கன அடி உடைய ஒரு யூனிட் விலை, 3,500 ரூபாயில் இருந்து, 4,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. பூச்சு வேலைக்கு பயன்படுத்தப்படும் பி சாண்ட், ஒரு யூனிட், 4,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
கருங்கல் ஜல்லிகள் விலை யூனிட், 3,000 ரூபாயில் இருந்து, 4,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், நான்கு யூனிட் அடங்கிய ஒரு லோடு எம் சாண்ட் வாங்க, 4,000 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.