உறுதி தன்மையுள்ள நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தம்: அமைச்சர் ராஜா
உறுதி தன்மையுள்ள நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தம்: அமைச்சர் ராஜா
ADDED : செப் 14, 2024 09:57 PM
சென்னை:தொழில் துறை அமைச்சர் ராஜா அறிக்கை:
முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான, அரசின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவேறிஉள்ளது.
இந்த பயணத்தில், 7,616 கோடி ரூபாய் புதிய முதலீடாக ஈர்க்கப்பட்டு, 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, உலக புகழ்பெற்ற போர்டு நிறுவனம், தன் உற்பத்தி ஆலையை மீண்டும் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இன்னும் கூடுதலாக முதலீடும், அதிகம் பேருக்கான வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்வதற்கான முதல் கட்ட பணிகளை, முதல்வர் முடித்து விட்டு வந்துள்ளார். வெகு விரைவில், மேலும் பல முதலீடுகள் வந்து குவிய உள்ளன.
இப்பயணத்தின் போது முதலீடுகள் செய்ய முன்வந்த அனைவருடனும், நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை.
யார் யார் உறுதியாக பணியை துவக்குவர் என்பதை, பல வகையில் உறுதி செய்து, அதன் வாயிலாக பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்படுமா என்பதையும் கவனத்தில் கொண்டே, ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அதனால் தான், முதல்வர் சொல்வதை போல, இந்த பயணத்தின் அனைத்து ஒப்பந்தங்களும், 100 சதவீதம் நிறைவேற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இன்னும் பல நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருந்த நிலையிலும், அவற்றின் உறுதித்தன்மை குறித்த கூடுதல் விபரங்களை பெற்று, அதன்பின், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடலாம் என, பரிசீலனையில் வைக்கப்பட்டு உள்ளன.
எதிர்க்கட்சிகளில் சில, ஏன் இன்னும் அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்கவில்லை என்று கேள்வி எழுப்புகின்றன.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட போதும், ஏன், 10 லட்சம் கோடி ரூபாய்க்கு போடவில்லை என்று, அவர்கள் அரசியல் செய்தனர். பக்கத்து மாநிலங்களை சுட்டிக்காட்டி, அந்த அளவுக்கு ஏன் இங்கு முதலீடு ஈர்க்கப்படவில்லை என்கின்றனர்.
அமெரிக்க பயணத்தில், சான் பிரான்சிஸ்கோவிலும், சிகாகோவிலும் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழகத்தில், 100 சதவீதம் முதலீடாக மாறி, மாநிலத்தில் பரவலான வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் என்பது நிச்சயம்.
முதல்வரின், 1 டிரில்லியன் அதாவது, 83 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக தமிழகம் உருவெடுக்கும் என்ற கனவு நனவாகும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.