ADDED : பிப் 27, 2025 02:40 AM
சென்னை:மின் வாரிய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த கோரி நடத்தப்படும் பேரணி, போராட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொது செயலர் பாலசந்தர் என்பவர் தாக்கல் செய்த மனு:
தமிழக மின் வாரியத்தில், 70 சதவீதம் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் இவர்களுக்கு, தினசரி 300 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என, மாநில அரசும் உறுதி அளித்தது.
ஒப்பந்த பணியாளர்களின் பிரச்னை குறித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 28ம் தேதி மாவட்ட தலைமை அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம், கவன ஈர்ப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால், பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே, போராட்டத்தை நடத்த அனுமதி கோரி, டி.ஜி.பி., மற்றும் மின் வாரிய தலைவர் ஆகியோருக்கு, கடந்த மாதம் 4ல் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கோரிக்கை மனுவை பரிசீலித்து, போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.