ADDED : ஜூலை 05, 2024 02:29 AM
சென்னை:காட்டுத் தீ சம்பவங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற்று, தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வகையில், சென்னையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகளை, வனத்துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதைத்தடுக்க, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம், தொலையுணர்வு செயற்கைக்கோள் வாயிலாக, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கிறது. அதன்படி, காட்டுத்தீ குறித்த தகவல்கள், அந்தந்த மாநில வனத்துறையினருக்கு பகிரப்படுகின்றன.
இதையடுத்து, மாவட்ட வனத்துறை அதிகாரிகள், கள பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு செல்கின்றனர். இதில், மாவட்ட அளவில் மேற்கொள்ளும் பணிகளை, மாநில அளவில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வனப்பகுதிகளில் சிறிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டாலும், தலைமையகத்துக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான், அங்கு கூடுதலாக ஆட்கள் தேவைப்படுமா என்பதை கணித்து, ராணுவம், விமானப் படை, பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் உதவியைக் கோர முடியும்.
இதற்காக, மாநில அளவில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, சென்னையில் துறை தலைமையகத்தில், 77 லட்சம் ரூபாயில், காட்டுத் தீ தடுப்புக்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இதுதவிர, 33 மாவட்ட தலைமையகங்களில், 6.28 கோடி ரூபாயில், கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படுத்தப்பட உள்ளன. அடர் வனப்பகுதிகளில், 44 இடங்களில், 3.32 கோடி ரூபாயில், காட்டுத் தீ கண்காணிப்பு கோபுரங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.