கழுகுகள் உயிரை பறிக்கும் மருந்துகளுக்கு கட்டுப்பாடு
கழுகுகள் உயிரை பறிக்கும் மருந்துகளுக்கு கட்டுப்பாடு
ADDED : ஜூலை 11, 2024 11:52 PM
சென்னை:'கழுகுகள் உயிரை பறிக்கும் மருந்துகளை, ஒரு முறைக்கு மேல் கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது' என, தமிழக அரசு தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு, 'நிம்சுலைட், ப்ளூனிக்சின், கார்ப்ரோபென்' ஆகிய மருந்துகளை செலுத்துவதாகவும், மருந்து செலுத்தப்பட்ட விலங்குகள் இறந்த பின், அவற்றின் மாமிசத்தை சாப்பிடும் கழுகுகள் அதிகளவில் உயிரிழக்கின்றன.
இம்மாவட்டங்களில் மூன்று மருந்துகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ''கழுகுகளை பாதுகாக்க, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
''அதன் காரணமாக, கழுகுகளின் எண்ணிக்கை, 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மருந்துகளை ஒருமுறை மட்டும், 30 மில்லி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
இதையடுத்து, இதை விரிவாக எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

