சர்ச்சைக்கு இடையே அண்ணாமலை மனு ஏற்பு வேட்பு மனுக்கள் பரிசீலனையில் வாக்குவாதம்
சர்ச்சைக்கு இடையே அண்ணாமலை மனு ஏற்பு வேட்பு மனுக்கள் பரிசீலனையில் வாக்குவாதம்
ADDED : மார் 29, 2024 12:35 AM

கோவை:'கோவையில் போட்டியிடும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் வேட்பு மனுவில் தவறு இருப்பதால் நிராகரிக்க வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்தனர். சர்ச்சைக்கு இடையே, அவரது மனு ஏற்கப்பட்டது.
கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட, 53 வேட்பாளர்கள், 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் பொது பார்வையாளர் வினோத் ராவ், காவல் பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோரது முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில், மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இரண்டு வேட்பு மனு வழங்கியிருந்தார்; ஒன்று நிராகரிக்கப்பட்டது. 'மற்றொன்றில், வழக்கு விபரங்களை வரிசையாக குறிப்பிடவில்லை. எந்த தொகுதியில் ஓட்டுரிமை இருக்கிறது என்கிற விபரத்தை தவறாக குறிப்பிட்டு இருந்தார். தேர்தல் ஆணையம் வழங்கிய படிவத்தின் படி பூர்த்தி செய்துகொடுக்காமல், அவர்களாக தயாரித்து வழங்கியிருக்கின்றனர். வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டுமென, அ.தி.மு.க., - தி.மு.க., - நாம் தமிழர் கட்சியினர் கூறினர். அதனால், இவர்களுக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அரங்கில் சலசலப்பு ஏற்பட்டதால், போலீசார் வரவழைக்கப்பட்டனர். வேட்பு மனுவை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர் கிராந்திகுமார், ஏற்கப்பட்டதாக தெரிவித்தார். இறுதியாக, 41 மனுக்கள் ஏற்கப்பட்டன; 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனு ஏற்பு
பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கூறுகையில், ''அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டது. சில ஆட்சேபனைகள் தெரிவித்தனர். தேர்தல் அலுவலர் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் அதிகாரிகளின் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது நியாயமல்ல என நாங்கள் கூறினோம். தி.மு.க., - அ.தி.மு.க., - நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் மீது புகார் கொடுக்க இருக்கிறோம்,'' என்றார்.
அண்ணாமலை மீது பயம்
பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''தேர்தல் அலுவலரே முடிவெடுக்க வேண்டும்; அவர், ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். அதற்கு எதிர்க்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்தனர். அண்ணாமலை பெயரை கேட்டாலே, எதிர்க்கட்சியினருக்கு பயம். ஒட்டுமொத்த கோவை மக்கள், அண்ணாமலைக்கு ஓட்டளிக்க தயாராக இருக்கின்றனர். சட்டம், நியாயம் அண்ணாமலையின் பக்கம், பா.ஜ., பக்கம் இருக்கிறது,'' என்றார்.
தி.மு.க., மீது சந்தேகம்
அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரனின் வக்கீல் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
அண்ணாமலை இரண்டு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வரிசை எண்: 17ல் பார்ட்-3ல் கையெழுத்து இல்லாமல் இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. வரிசை எண்: 27ல் பிரமாண பத்திரத்தில், அவர் சொந்த 'பார்மட்'டில் தயாரித்து வழங்கியிருந்தார். வேட்பாளரின் வேட்பு மனுவை நிராகரிப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் வழங்கி, கையேடு கொடுத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் 'பார்மட்'டில், பிரமாண பத்திரம் இல்லையெனில், நிராகரிக்க வேண்டும்.
சொந்தமாக 'பார்மட்' தயாரித்து, குற்ற வழக்குகள் குறித்த தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, தேர்தல் அலுவலர் அறிவித்து விட்டார். இதுதொடர்பாக, தி.மு.க.,வினர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தி.மு.க., - பா.ஜ.வுக்கும் இடையே கள்ளக்கூட்டணி இருக்குமோ என சந்தேகிக்கின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அதிகமானோர் வந்தது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ஜ., 'பி' டீம் தி.மு.க.,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி கூறுகையில், ''அண்ணாமலை தாக்கல் செய்த வேட்பு மனுவில் மூன்று தவறு இருப்பதை சுட்டிக்காட்டினோம். ஆதாரப்பூர்வமாக கூறியும் எங்களது ஆட்சேபனையை தேர்தல் அதிகாரி காது கொடுத்து கேட்கவில்லை. தி.மு.க.,வினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல், அமைதியாக இருந்தனர். பா.ஜ., 'பி' டீம் தி.மு.க., தான்,'' என்றார்.

