ADDED : பிப் 22, 2025 11:25 PM
சென்னை:தானியங்கி முறையில் பணம் எடுக்கும் இயந்திரம், பணம் டிபாசிட் செய்யும் மையங்களை துவக்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, 25 இடங்களில் அந்த வசதியை ஏற்படுத்துவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு, சென்னையில் 51 கிளைகளும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு 924 கிளைகளும் உள்ளன.
இந்த கிளைகளை ஒட்டிய இடங்களில், ஏ.டி.எம்., மையங்கள் மட்டும் உள்ளன.
தேசிய மற்றும் தனியார் துறை வங்கிகள், ஏ.டி.எம்., மையத்திலேயே பணம் டிபாசிட் செய்யும் இயந்திரம், வங்கி கணக்கு புத்தகத்தை அச்சிடும் இயந்திரம் போன்றவற்றை அமைத்துள்ளன.
இதனால், ஒரே இடத்தில் வங்கியின் பல்வேறு சேவைகளை பெற முடிகிறது. இதற்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பும் காணப்படுகிறது.
எனவே, கூட்டுறவு வங்கிகளில் சார்பிலும், பணம் டிபாசிட் செய்யும் இயந்திரம், வங்கி கணக்கு புத்தகம் அச்சடிப்பு உள்ளிட்ட வசதிகள் அடங்கிய ஏ.டி.எம்., மையங்கள் ஏற்படுத்த, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக, தலைமை கூட்டுறவு வங்கிக்கு ஒன்று; மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக 24 என, மாநிலம் முழுதும், 25 இடங்களில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

