'ஆர்டர்' கொடுத்த இலவச வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்யாமல் கூட்டுறவு துறை 'டிமிக்கி'
'ஆர்டர்' கொடுத்த இலவச வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்யாமல் கூட்டுறவு துறை 'டிமிக்கி'
ADDED : மார் 09, 2025 02:03 AM

கடந்த பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி முடிந்தும் தலா, 35 லட்சத்துக்கும் மேலான வேட்டி, சேலைகளை வருவாய்த் துறை, கூட்டுறவு துறை கொள்முதல் செய்யாமல் உள்ளன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் கடைகள் வாயிலாக வழங்க, 1 கோடியே, 77 லட்சத்து, 22,995 வேட்டிகள்; 1 கோடியே, 77 லட்சத்து, 64,471 சேலைகள் உற்பத்திக்கு கடந்தாண்டு உத்தரவிட்டது.
கடந்த பொங்கல் பண்டிகையின் போது, 80 சதவீத வேட்டியும், 60 சதவீத சேலையும் உற்பத்தி செய்த நிலையில் வரும், 31 வரை ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலைகளை பயனாளிகள் பெறலாம் என்று, அரசு அறிவித்தது. தாமதமாக உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் ஈரோடு, திருச்செங்கோடு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விசைத்தறியாளர்கள் கூட்டுறவு சங்க கிடங்குகளில் உள்ளன.
இதுபற்றி, விசைத்தறியாளர்கள் கூறியதாவது:
கடந்த ஜனவரி 31 வரை உற்பத்தியான வேட்டி, சேலைகளை வருவாய்த் துறை, கூட்டுறவு துறையினர் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பினர்.
அதன்பின் உற்பத்தியான தலா 35 லட்சம் வேட்டி, 35 லட்சம் சேலைகள் தரம் சரிபார்ப்புக்குக் கூட செல்லாமல், விசைத்தறியாளர்களின் கூட்டுறவு சங்க கிடங்குகளில் உள்ளன.
இவற்றை கொள்முதல் செய்து, ரேஷன் வாயிலாக வினியோகம் அல்லது பிற இடர்பாடு நேரத்தில் மக்களுக்கு வழங்குவதற்காக வருவாய்த் துறையினர் கொள்முதல் செய்ய வேண்டும்.
கடந்த மூன்று தொகுதியாக உற்பத்தி செய்த வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்து, அதற்காக ஒரு வேட்டிக்கு, 24 ரூபாய்க்கு, 90 சதவீதக் கூலியாக, 22 ரூபாயும், சேலைக்கு, 43 ரூபாயில், 90 சதவீத கூலியாக, 39 ரூபாயும் சொசைட்டிக்கு வழங்கப்பட்டு, அந்த தொகை நெசவாளர்களை சென்றடைந்தது.
நான்காவது தொகுதியாக உற்பத்தியானவற்றை கொள்முதல் செய்யாததால், அதற்கான கூலி வருவதிலும் தாமதம் ஏற்பட்டு, வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு சென்றடைவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- - நமது நிருபர் - .