ADDED : செப் 02, 2024 03:45 AM
சென்னை: பயிர் கடன் இலக்கை முடிக்க, கூட்டுறவு துறை முயற்சி மேற்கொண்டு உள்ளது.
சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், இடுபொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்க, கூட்டுறவு துறை வாயிலாக பயிர் கடன்கள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டு, 16,000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவத்தில் இயல்பான அளவில் சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. பல மாவட்டங்களில் வறட்சி மற்றும் திடீர் மழையால் சாகுபடி நடக்கவில்லை.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே பயிர் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தற்போது, டெல்டாவில் சம்பா பருவ நெல் சாகுபடி துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழையால், பல மாவட்டங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதை பயன்படுத்தி, சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சாகுபடிக்கு பயிர் கடன் கேட்டு, கூட்டுறவு வங்கிகளுக்கு விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர்.
எனவே, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன்களை வழங்கி, இலக்கை பூர்த்தி செய்ய, கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூட்டுறவு பயிர் கடன்களை பெற, வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. இப்போது, புதிதாக மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் இருந்தே பயிர் கடன்களை, விவசாயிகள் எளிதாக பெற முடியும்.
இதை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சற்று காலதாமதம் ஆனாலும், புதிய செயலி வாயிலாக இலக்கை விரைந்து அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.