சிங்கப்பூரில் கொரோனா பரவல் 'தமிழகத்தில் பீதி வேண்டாம்'
சிங்கப்பூரில் கொரோனா பரவல் 'தமிழகத்தில் பீதி வேண்டாம்'
ADDED : மே 21, 2024 04:45 AM
சென்னை: 'சிங்கப்பூரில், ஒமைக்ரானின் கே.பி.2 வகையை சேர்ந்த கொரோனா தான் பரவி வருகிறது. அதனால், தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம்' என, பொது சுகாதாரத் துறை கூறியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், அவ்வப்போது ஓரிரு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதன்படி, மாநிலம் முழுதும் 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் சென்னையில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில், 26,000த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்குள்ள மக்களை முகக்கவசம் அணியும்படி, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திற்கும், சிங்கப்பூருக்கும் நேரடி விமான போக்குவரத்து சேவை உள்ளது. இதனால், சிங்கப்பூரில் பரவும் கொரோனா, தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பொது சுகாதாரத் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
சிங்கப்பூர் நாட்டில், கே.பி.2 வகை கொரோனா பரவல் இருக்கிறது. இது, ஒமைக்ரான் வகையை சேர்ந்த வைரஸ். இந்த ஒமைக்ரான் வகை பரவல் அதிகமாக இருந்தாலும், தீவிர பாதிப்பு தன்மை பெரியளவில் இல்லை.
எனவே, சிங்கப்பூர் கொரோனா பரவல் குறித்து, தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம். அதேநேரம், பொது இடங்களில் செல்வோர் முகக்கவசம் அணிவதையும், அடிக்கடி கைகளை கழுவுவதும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

