ADDED : ஏப் 12, 2024 08:38 PM
சென்னை,:'பா.ஜ., ஆட்சி படுதோல்வி அடைந்துள்ளால்,ஆட்சியின் முடிவுக்கான, 'கவுன்ட்டவுன்' துவங்கி விட்டது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
புகழ்பெற்ற ஒரு ஆய்வு அமைப்பு, வரும் லோக்சபா தேர்தலில் முக்கிய பிரச்னைகள் எவை என, மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
அதில், 27 சதவீதம் பேர் வேலையின்மை தான் முக்கிய பிரச்னை என்றும், 23 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு என்றும், 55 சதவீதம் பேர் கடந்த ஐந்தாண்டு பா.ஜ., ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது என்றும், ஏழை மக்களில் 76 சதவீதம் பேர், விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கிய பிரச்னை என்றும் கூறியுள்ளனர்.
இதிலிருந்தே இந்த பா.ஜ., ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் துவங்கி விட்டது என்பதை அறியலாம்.
அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்களிடமே மீண்டும், மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என, மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்னைகளை தீர்ப்பதில், 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி படுதோல்வி அடைந்து விட்டதை மக்கள் உணரத் துவங்கி விட்டனர்.
சிலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

