அங்கீகாரமில்லாத படிப்புகள் ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை
அங்கீகாரமில்லாத படிப்புகள் ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை
ADDED : ஏப் 18, 2024 07:54 PM
சென்னை:தொலைநிலை படிப்பில், முதுநிலை பட்டப்படிப்பில் சேருவோர், அங்கீகார நிலையை தெரிந்து கொள்ளுமாறு, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது.
நாடு முழுதும் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் நேரடியாகவும், தொலைநிலையிலும் நடத்தும் படிப்புகளுக்கு, பல்வேறு வகை அங்கீகாரங்களை பெற வேண்டும்.
அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் படிப்புகளில் சேர்ந்தால், அவை மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியற்றதாகி விடுகிறது.
இந்நிலையில், முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள், தங்கள் பாடப்பிரிவுக்கான அங்கீகாரம் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின்படி, திறந்த மற்றும் தொலைநிலை படிப்பிலும், ஆன்லைன் படிப்பிலும், டிப்ளமா, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு போன்றவற்றுக்கு, இன்ஜினியரிங், தொழில்நுட்பம், திட்டமிடல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் - கேட்டரிங் தொழில்நுட்பம், அப்ளைடு ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ், டிசைன் ஆகிய படிப்புகளுக்கு அனுமதி அளிப்பதில்லை.
முதுநிலை படிப்பை பொறுத்தவரை, முதுநிலை டிப்ளமா, முதுநிலை சான்றிதழ் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில், மேலாண்மை, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, பிளாக் செயின், லாஜிஸ்டிக்ஸ், டிராவல் அண்டு டூரிசம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
எனவே, மாணவர்கள் மேற்கண்ட படிப்புகளில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் சேரும் போது, அதன் அங்கீகார நிலையை தெரிந்து கொண்டு சேர வேண்டும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

