சென்னைக்கு இணையாக தென் மாவட்டங்களில் வசதி போலீசுக்கு வழங்க ஐகோர்ட் உத்தரவு
சென்னைக்கு இணையாக தென் மாவட்டங்களில் வசதி போலீசுக்கு வழங்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 15, 2024 01:03 AM
மதுரை:'தென்மாவட்டங்களிலுள்ள போலீஸ் விசாரணை அமைப்புகளுக்கு, சென்னைக்கு இணையாக போதிய உபகரணங்கள் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது. சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிரியா பிஸ்வகுமார் என்பவரிடம், 4.5 கோடி ரூபாயை வங்கி பரிமாற்றத்தின் வாயிலாக பெற்று மோசடியில் ஈடுபட்டதாக, சிலர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், 2023ல் வழக்கு பதிந்தனர்.
பிரியா பிஸ்வகுமார், 'விசாரணையில் முன்னேற்றம் இல்லை. விசாரணை நடத்துவதற்கு தேவையான வசதிகள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் இல்லை.
வழக்கின் விசாரணையை சென்னை நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
நீதிபதி: மனுதாரர் கூறுவதுபோல இதுபோன்ற குற்றங்களை விசாரிக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மதுரையில் போதுமானதாக இல்லை. சென்னைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, பிற மாவட்டங்கள், குறிப்பாக, தென்மாவட்டங்களில் போலீஸ் விசாரணை அமைப்புகளுக்கு உள்கட்டமைப்புகள் ஏற்படுத்துவதில் அல்லது திட்டங்களை வழங்குவதில் மாற்றாந்தாய் மனப்பான்மை பின்பற்றப்படுகிறது.
போதிய வசதிகள் செய்யாமல், தரமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. சென்னையிலுள்ள 'சைபர்' பிரிவு மற்றும் தடயவியல் ஆய்வகத்திற்கு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வசதிகளில் 1 சதவீதம் கூட மற்ற மாவட்டங்களுக்கு வழங்கப்படவில்லை; இது, துரதிர்ஷ்டவசமானது. தென்மாவட்டங்களில் உள்ளவர்களும் இம்மாநிலத்தின் குடிமக்கள் தான். இங்கு பயனுள்ள விசாரணைக்கு உரிமை உள்ளது.
தென்மாவட்டங்களிலுள்ள போலீஸ் விசாரணை அமைப்புகள் பயனுள்ள விசாரணை மேற்கொள்ள, சென்னைக்கு இணையாக போதுமான உபகரணங்கள் வழங்கப்படுவதை தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம், மண்டல அளவில் தேவையான உள்கட்டமைப்புகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.