மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு நிலைப்பாட்டை கேட்கிறது கோர்ட்
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு நிலைப்பாட்டை கேட்கிறது கோர்ட்
ADDED : மார் 04, 2025 02:15 AM
'மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது.
மேல்முறையீடு
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்தக்கோரி, மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
ஏற்கனவே இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போது செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விபரங்களை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் மாஞ்சோலை, புலிகள் வாழும் பகுதியாக இருப்பதால், அங்கு எப்படி மக்களை வசிக்க அனுமதிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தள்ளுபடி
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் வாதிடுகையில், ''மாஞ்சோலை மறுவாழ்வு விவகாரத்தில், தொழிலாளர்கள் கேட்ட கோரிக்கைகளை விட, தமிழக அரசு அதிக நிவாரணங்களை வழங்கி இருக்கிறது.
''ஏற்கனவே அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' எனக் கோரினார்.
இதையடுத்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''மாஞ்சோலை விவகாரம் சுற்றுச்சூழல் பிரச்னைகள் உடையது.
''அது பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த விவகாரத்தில் எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்,'' என, கோரினார்.
இதைத் தொடர்ந்து, விசாரணையை, 7ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தங்களுக்கு தெளிவாக விவரிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -