ADDED : செப் 04, 2024 02:06 AM

சென்னை: சமூக ஊடகங்களில் அவதுாறாக பேசியதற்காக, 5 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு, நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்ய, இரண்டு வாரம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனு:
சினிமாவில் 2000 முதல், நானும், நடிகர் சிங்கமுத்துவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளோம். எனக்கு கிடைத்த வரவேற்பால் பொறாமை கொண்டு, 2015க்கு பின், என்னை பற்றி மோசமாக பேச துவங்கியதால், சிங்கமுத்துவுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தேன். தாம்பரத்தில் பிரச்னைக்குரிய நிலத்தை, சிங்கமுத்து எனக்கு வாங்கி கொடுத்தார்.
இதுதொடர்பாக, அவருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில், நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பல்வேறு சமூக ஊடகங்களில், எனக்கு எதிராக சிங்கமுத்து அளித்த பேட்டியில், துளி கூட உண்மையில்லாத பல பொய்களை கூறி, தரக்குறைவாக பேசி உள்ளார்.
என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும். அவதுாறாக பேச, அவருக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வக்காலத்து தாக்கல் செய்ய உள்ளதால், அவகாசம் வழங்க வேண்டும்' என்றார்.
அதை ஏற்ற நீதிபதி, வக்காலத்து தாக்கல் செய்யவும், பதில் மனு தாக்கல் செய்யவும், சிங்கமுத்துவுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளிவைத்தார்.