ADDED : ஏப் 29, 2024 10:53 PM

புதுக்கோட்டை:கந்தர்வகோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான் தெருவில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி பிரச்சனையில் சம்பந்தப்பட்ட குடிநீரில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சி, குருவாண்டான் தெரு பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வரும் குடிநீர் கலங்கலாக கடந்த சில தினங்களுக்கு முன் வந்ததையடுத்து, அப்போது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் குடிநீர் தேக்க தொட்டி மீது ஏறி பார்த்தபோது, அங்கு மாட்டுச் சாணம் கிடப்பதாக, அவர் கூறியதையடுத்து, குடிநீரில் மாற்று சாணம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
தொடர்ந்து, கந்தர்வகோட்டை பி.டி.ஓ.,பெரியசாமி, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரியை திருச்சியில் உள்ள மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைததார்.
இந்நிலையில், மண்டல பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வகத்தில் இருந்து நேற்று பெறப்பட்ட அறிக்கையில், குடிநீர் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும் நோய்க்கிருமி தொற்றுகள் ஏதும் இல்லை என்றும் அறிக்கை வந்துள்ளது. ஆகையால், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்ததாக கூறிய புகார்களுக்கு விடை கிடைத்துள்ளது.

