குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கவில்லை உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., தகவல்
குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கவில்லை உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., தகவல்
ADDED : ஜூன் 27, 2024 01:55 AM
மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை என பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனு: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் ஏப்.,25 ல் மாட்டு சாணம் கலக்கப்பட்டது. கந்தர்வகோட்டை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை.
மாவட்டத்தில் பல கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. குடிநீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்டது குறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்னியன்விடுதி, அரையபட்டி, வேம்பன்பட்டி, வீரடிபட்டி, இலைக்காடிவிடுதி, பல்லவராயன்பட்டியின் சில டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள திருமண மண்டபங்களில் குறிப்பிட்ட சமூக மக்கள் நுழைய மற்றும் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்.
கூத்தங்குடி வைராண்டி கண்மாயை குறிப்பிட்ட சமூக மக்கள் பயன்படுத்த அனுமதிக்க தமிழக உள்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
மே 15 ல் நீதிபதிகள் அமர்வு: சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.
அரசு தரப்பு: சங்கம்விடுதி குடிநீர் தொட்டியை அனைத்து சமூக மக்களும் பயன்படுத்துகின்றனர். குழாய்களிலிருந்து துர்நாற்றத்துடன் குடிநீர் வெளியேறியது குறித்து புகார் வந்தது. பின் குடிநீர் தொட்டியிலிருந்த தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது. தொட்டியில் சாணம் போன்ற கெட்டியான திடப்பொருள் படிந்திருந்தது.
அதை அலைபேசியில் சிலர் போட்டோ எடுத்துள்ளனர். அலைபேசியை ஆய்விற்குட்படுத்துவதற்காக ஒப்படைக்குமாறு கோரினால் தர மறுக்கின்றனர். குடிநீரை பரிசோதனைக்குட்படுத்தியதில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை என உறுதியாகியுள்ளது. 216 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.
டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறை நடைமுறையில் இல்லை. திருமண மண்டபங்கள், கண்மாயில் குறிப்பிட்ட சமூக மக்களை யாரும் தடுக்கவில்லை.
இவ்வாறு கூறி சி.பி.சி.ஐ.டி.,தரப்பின் அறிக்கையை தாக்கல் செய்தது. நீதிபதிகள்: விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சி.பி.சி.ஐ.டி.,தரப்பில் ஜூலை 18 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இறுதி அறிக்கையை இங்கும், சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.