கள்ளச்சாராய வழக்கில் கைதான 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., முடிவு
கள்ளச்சாராய வழக்கில் கைதான 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., முடிவு
ADDED : ஜூன் 27, 2024 11:54 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கைதானவர்களில் 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 229 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 63 பேர் இறந்தனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார், கள்ளச்சாராயம் விற்றவர்கள், மெத்தனால் சப்ளையர்கள் என மொத்தம் 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் கள்ளச்சாராயம் விற்று கருணாபுரம் கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ்,50; அவரது மனைவி விஜயா,44; சேஷசமுத்திரம் சின்னதுரை,36; விரியூர் ஜோசப்,40; மெத்தனால் சப்ளை செய்த மடுகரை மாதவன் மகன் மாதேஷ்,19; சென்னை சிவக்குமார்,39; பன்ஷிலால்,32; கவுதம்சந்த்,50; உள்ளிட்ட 11 பேரை காவலில் எடுத்துவைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பான மனுவை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். கோர்ட் அனுமதி பெற்று, 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தால், மேலும் பலர் சிக்குவார்கள் எனக்கூறப்படுகிறது.

