'கிடுக்கிப்பிடி' 15க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
'கிடுக்கிப்பிடி' 15க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 23, 2024 04:53 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மெத்தனால் கிடைத்தது தொடர்பாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடித்து கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் நகரின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தோர், மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகினர். நேற்று பகல் 2:00 மணி நிலவரப்படி 54 பேர் இறந்தனர். பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளச்சாராய வழக்கை கூடுதல் எஸ்.பி., கோமதி தலைமையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மெத்தனால் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட கருணாபுரம் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன் மற்றும் சரணடைந்த மாதவச்சேரி சாராய வியாபாரி முத்து மகன் ராமர்,36; ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் பெரியசாமி மகன் சின்னதுரை, 36; விரியூர் பெரியநாயகம் மகன் ஜோசப்ராஜா, 35; ஆகியோரை பிடித்து 'மெத்தனால்' எங்கிருந்து யாரிடம் வாங்கினர் என்பது குறித்து விசாரித்தனர். அதில், அவர்கள் புதுச்சேரி மாநிலம், மடுகரை மாதேஷ் மற்றும் கண்ணன் ஆகியோரிடம் மெத்தனால் வாங்கியது தெரிய வந்துள்ளது.
அதனையொட்டி புதுச்சேரி மற்றும் கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள மாவட்டங்களான கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், வேலுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மெத்தனால் விற்பனை செய்வோர் மற்றும் மாதேஷ், கண்ணன் ஆகியோரிடம் தொடர்பில் உள்ளவர்களை விசாரணை வளையத்திற்குள் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கொண்டு வந்துள்ளனர். இவர்களுக்கு எங்கிருந்து மெத்தனால் வந்தது. மேலும், இவர்களிடம் இருந்து யார், யார் மெத்தனால் வாங்கினர் என்பது குறித்த 'லிங்க்' தொடர்பாக அவர்களுக்கு மொபைல் போன் உரையாடல்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை 6 பேர் கைது
கள்ளக்குறிச்சி, மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான வழக்கு தொடர்பாக இதுவரை கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன், சின்னதுரை, ஜோசப்ராஜா, மடுகரை போதைப்பொருள் வியாபாரி ஷாகுல்அமீது, 60; உட்பட 6 பேரை கைது செய்தள்ளனர்.

