ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி பா.ஜ., முதல்வரை சந்தித்த பின் வானதி பேட்டி
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி பா.ஜ., முதல்வரை சந்தித்த பின் வானதி பேட்டி
ADDED : ஆக 20, 2024 07:42 PM
சென்னை:முதல்வர் ஸ்டாலினை நேற்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் சந்தித்து பேசினார்.
வானதி கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், மத்திய அரசு நிதி வழங்காதது குறித்து முதல்வர் கூறினார். தமிழக நலனுக்காக எல்லா முயற்சிகளையும் பா.ஜ., மேற்கொள்ளும் என, அவரிடம் தெரிவித்தேன்.
கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில், சில மாற்றங்களை தமிழக அரசு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், மத்திய அரசு நிதி வழங்க தயாராக உள்ளது. கோவை மட்டுமின்றி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியம். தமிழக அரசு தெரிவித்த நிபந்தனைகள் காரணமாக, அதற்கான பணிகள் தாமதமாகி வந்தன.
தற்போது, மற்ற மாநிலங்களில் உள்ளது போல, விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கையகப்படுத்தி கொடுப்பதில் உள்ள நிபந்தனைகளை, தமிழக அரசு விலக்கி கொள்ள முன்வந்திருக்கிறது. முதல்வர் இந்த நல்ல செய்தியை என்னிடம் கூறினார். இதற்கு முதல்வருக்கு நன்றி.
கருணாநிதி நுாற்றாண்டு நாணயம் வெளியீட்டுக்கு பின். மத்திய, மாநில அரசுகள் தொடர்பாக நிறைய கதைகள் பேசப்படுகின்றன. மக்கள் பிரச்னைகளை மாநில அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுகிறோம். இதில் மற்ற விஷயங்களை சேர்ப்பது கற்பனை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்., தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்வப்பெருந்தகையும் நேற்று முதல்வரை சந்தித்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். முதல்வருக்கு இன்று திருமண நாள். அதற்கு வாழ்த்து கூறினேன். காந்தி குறித்த புத்தகத்தை பரிசாக அளித்தேன்; வேறு ஒன்றும் பேசவில்லை,'' என்றார்.
***

