கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட்டுகள் கிரிக்கெட் வாரியம் விசாரிக்க உத்தரவு
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட்டுகள் கிரிக்கெட் வாரியம் விசாரிக்க உத்தரவு
ADDED : ஏப் 27, 2024 02:42 AM
சென்னை:சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்த புகாரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சத்தியபிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, உலகம் முழுதும் உள்ள மக்களை ஈர்த்துள்ளது. கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்துக்கு, ரசிகர்கள் நேரில் வர ஆர்வம் காட்டுகின்றனர்.
இதை சமூக விரோதிகள் பயன்படுத்தி, பெருமளவு டிக்கெட்டுகளை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். டிக்கெட் விற்பனைக்கு விதிமுறை இருந்தாலும், அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை. இதனால், கள்ளச்சந்தையில் விற்று பெருமளவு சம்பாதிக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில், கிரிக்கெட் போட்டி நடக்கும் போதெல்லாம், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. குறைந்த கட்டண டிக்கெட்டுகள் கூட, 14,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையால், நம் நாட்டுக்கு உலக அளவில் கெட்ட பெயர் ஏற்படுகிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்துபவர்கள் மீதும், மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர்.
கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்த விவகாரத்தில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, 31,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளச்சந்தையில், 10 மடங்கு அதிகமாக விலை நிர்ணயித்து, டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளன. முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக, போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை.
விளையாட்டு மைதான அதிகாரிகளுடன், கள்ளச்சந்தை மாபியாவும் கைகோர்த்துள்ளனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சாதாரண கிரிக்கெட் ரசிகர்களால், போட்டியை நேரில் பார்த்து ரசிக்க முடியவில்லை. ஆன்லைனில் டிக்கெட் வாங்க முற்பட்டால், சில நிமிடங்களில் விற்பனையாகி விட்டதாக காட்டுகிறது.
செல்வாக்கு மிக்கவர்களால் மட்டுமே, மைதானம் வந்து நேரில் கிரிக்கெட் போட்டியை ரசிக்க முடியும்; சாதாரண ரசிகர்களால் முடியாது என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை குறித்து நடவடிக்கை கோரி, இரண்டு முறை மனுக்கள் அனுப்பினேன்.
என் மனுக்களை பரிசீலித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போட்டிகள் முடியும் நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல் பெஞ்ச், மனுதாரர் அனுப்பிய மனுக்களை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் உத்தரவிட்டது.

