இலவச பயண திட்டத்தால் கோடிக்கணக்கான பெண்கள் பலன்: உதயநிதி பேச்சு
இலவச பயண திட்டத்தால் கோடிக்கணக்கான பெண்கள் பலன்: உதயநிதி பேச்சு
ADDED : மார் 29, 2024 12:32 PM

திருவள்ளூர்: 'திமுக அரசு கொண்டு வந்த இலவச பயண திட்டத்தால், 460 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். இது தான் அந்த திட்டத்தின் வெற்றி' என உதயநிதி பேசினார்.
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஓட்டு சேகரித்தார். அப்போது உதயநிதி பேசியதாவது:
திமுக மற்றும் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. கடந்த லோக்சபா தேர்தலில் நமது எதிரிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தனர். தற்போது பிரிந்து தேர்தலை சந்திக்கின்றனர். 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்தால், திருவள்ளூரில் நான் மாதம் 2 நாள் தங்கி மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்.
460 கோடி பயணங்கள்
முதல்வர் ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பெரிய வெற்றியை கொடுத்தனர். பா.ஜ., மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் ஓட்டு கேட்டு வரும் போது நீங்கள் என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்புங்கள். ஒரு திட்டத்தை அரசு அமல்படுத்தினால், எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை பெண்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். இலவச பயண திட்டத்தால் 460 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். இது தான் அந்த திட்டத்தின் வெற்றி. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 3 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
தமிழக மக்கள் தயார்
பா.ஜ., அரசை தோற்கடிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர். மதுரை எயம்ஸ் மருத்துவமனை கட்ட 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஒரு கல் வைத்து விட்டு, மருத்துவமனை என்று கூறுகிறார்கள். ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. பா.ஜ.,விடம் கேள்வி எழுப்பினால் இபிஎஸ்.,க்கு கோபம் வருகிறது.
பா.ஜ., மற்றும் இ.பிஎஸ்., இடையே கள்ளக் காதல் உள்ளது. மாநில உரிமைகளை எல்லாம் விட்டு கொடுத்து விட்டார். பா.ஜ.,வின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்தான் நம்முடைய வேட்பாளர் சசிகாந்த் செந்தில். நீங்கள் செலுத்தும் ஓட்டு மோடி தலையில் வைக்கும் வேட்டு. வேட்டு வைப்பீர்களா?. இவ்வாறு உதயநிதி பேசினார்.

