ஓட்டளிக்க சொந்த ஊர் பயணம் ரயில்களில் அலைமோதிய கூட்டம்
ஓட்டளிக்க சொந்த ஊர் பயணம் ரயில்களில் அலைமோதிய கூட்டம்
ADDED : ஏப் 19, 2024 12:08 AM

திருப்பூர்:தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி அசாம், பீஹார், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட, 21 மாநிலங்களில் இன்று, 102 லோக்சபா தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
தொழில் வாய்ப்புகளை தேடி, புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கியுள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக உள்ளனர். தங்கள் மாநிலங்களில் ஓட்டுப்பதிவு நடப்பதால், அங்கு சென்று ஓட்டளிக்க ஏதுவாக நேற்று முன்தினம் முதல் பலரும் ரயிலில் சொந்த ஊர் செல்ல துவங்கினர்.
இரண்டு நாட்கள் பயணித்து, இன்று தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று ஓட்டளிக்க உள்ளனர்.
கேரளாவில் புறப்பட்டு, கோவை கடந்து, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்த கன்னியாகுமரி - புனே, திருவனந்தபுரம் - புதுடில்லி, திருவனந்தபுரம் - கோரக்பூர், பிலாஸ்பூர், ஆலப்புழா - தன்பாத் உள்ளிட்ட வடமாநிலங்கள் செல்லும் ரயில்களில் பயணியர் கூட்டம் அதிகரித்தது.
முன்பதிவில்லா டிக்கெட் பெற்று, பொது பெட்டிகளில் பயணியர் முண்டியடித்து ஏறினர்.
அதுபோல, தமிழகத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டு போடுபவர்களின் வசதிக்கு, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நேற்று முன்தினம் முதல், வரும், 21 வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் பஸ்களின் இயக்கம் துவங்கிய நிலையில், வழக்கமாக இயக்கப்படும், 2,092 பஸ்களுடன் கூடுதலாக, 807 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில், 1 லட்சத்து, 48,800 பேர் பயணித்தனர். நேற்று அனைத்து நகர பஸ் ஸ்டாண்டுகளில் கூட்டம் அலைமோதியது.
சொந்த ஊர் செல்ல, 1.72 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். 80,000 பேர் முன்பதிவு செய்யாமல் பயணித்தனர்.
இதன்மூலம் அரசு பஸ்களில் மட்டும், 2 நாட்களில், 4 லட்சம் பேர் பயணித்ததாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆம்னி பஸ்களில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

