ADDED : ஆக 03, 2024 12:36 AM
சென்னை:வங்கக்கடலின் பல்வேறு பகுதிகளில், சூறாவளிக் காற்று அதிகரித்துள்ளதால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று வலுவான தரைக்காற்று வீசுவதுடன், இடி, மின்ன லுடன் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அடுத்து வரும் சில நாட்களில் இதே நிலை தொடரும்.
மிதமான மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலின் பல்வேறு பாகங்களில், கடந்த சில நாட்களாக சூறாவளிக் காற்று வீசுவது அதிகரித்துள்ளது.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மத்திய மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
சில இடங்களில் இடையிடையே மணிக்கு, 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசலாம் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெயில் சதம்
தமிழகத்தில், நேற்று அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதேபோன்று, நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சி நகரங்களிலும், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.