ADDED : ஏப் 07, 2024 01:00 AM
சென்னை:'சுட்டெரிக்கும் வெயிலில் கறவை மாடுகளை காக்க, பால் உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பால்வளத் துறை இயக்குனர் வினீத் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
l தற்போதைய கோடைக்காலத்தில், வெப்பநிலை இயல்பை விட, 2 முதல் 3 டிகிரி வரை கூடுதலாக காணப்படுகிறது. இதனால், கறவை மாடுகளுக்கு வெப்பத்தின் தாக்கம் காரணமாக, தீவனம் உட்கொள்ளும் திறன் குறைந்து, அவற்றின் பால் உற்பத்தி பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. எனவே, கறவைகளின் உற்பத்தி திறனை பாதுகாக்க, உரிய பராமரிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
l சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, கறவை மாடுகளை பகல் பொழுதில், நல்ல காற்றோட்டமான கொட்டகை அல்லது மரத்தடி நிழலில் கட்டிவைக்கவேண்டும்
l கறவைகள் தண்ணீர் அருந்தும் குடிநீர் தொட்டிகளை நிழலில் இருக்குமாறும், அதில் எப்போதும் துாய்மையான தண்ணீர் குடிக்க கிடைக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும். வெப்ப அயற்சி சோர்வை போக்க, தாது உப்பு கலந்த தண்ணீரை கொடுப்பது நன்று
l நிறைமாத சினையாக உள்ள கறவை மாடுகள், வெப்பத்தின் தாக்கத்தால் தீவனம் உண்பதில் நாட்டம் குறையும். இதனால், கருவில் வளரும் கன்று வளர்ச்சிக்கு தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல், ஆரோக்கியமான கன்று ஈனுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது
l கறவை மாடுகளுக்கு கோமாரி, அம்மை, அடைப்பான் போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. இந்நோய் தாக்குதலில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, உரிய தடுப்பூசிகளை கறவை மாடுகளுக்கு போட வேண்டும்
l கோடைக்காலத்தில் வறட்சி காரணமாக ஏற்படும் தீவனப் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், ஊறுகாய் புல், உலர் புல் போன்ற பதப்படுத்திய பசுந்தீவனங்களை இருப்பில் வைத்து, கறவை மாடுகளுக்கு அளிப்பது நன்று.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
