ADDED : ஆக 14, 2024 08:56 PM
சென்னை:''தமிழகத்தில் எந்த காலத்திலும் ஒரு தலித் முதல்வராக முடியாது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
உள் ஒதுக்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், மாநில அரசுகளுக்கான உள்ஒதுக்கீடு உரிமையும், 'கிரிமிலேயர்' ஆகிய இரண்டும் தான் முக்கிய பிரச்னை என்பதை நாம் உணர வேண்டும்.
தமிழகத்தில் அருந்ததியருக்கு, 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கும், ஆந்திராவில் வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தில் அருந்ததியருக்கு பட்டியல் சமூக இடஒதுக்கீட்டில் முன்னுரிமை தரப்படுகிறது. ஆனால், ஆந்திராவில் பட்டியல் சமூகத்தை தனி அங்கமாக பிரித்து, இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பட்டியல் சமூகத்தினரை பல்வேறு குழுக்களாக பிரித்து, இட ஒதுக்கீட்டை பங்கீடு செய்வதற்கு, மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும், வருமான வரம்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரிமிலேயர் முறையை திணிக்க முயல்வதையும் எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
கிரிமிலேயர் குறித்து நீதிபதிகள் கூறிய கருத்துக்களை, அந்த தீர்ப்பிலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும் போகும். ஆனால், எந்த காலத்திலும் ஒரு தலித் முதல்வராக முடியாது; அந்த சூழல் தான் இங்கு உள்ளது.
ஜனநாயகத்தை பற்றி எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம். ஜாதியை ஒழிப்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நோக்கம். அதில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள். ஜாதிய உள்நோக்கத்துடன் யாரும் என் பின்னால் வர வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.