ADDED : ஜூன் 04, 2024 01:36 AM

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், நேற்று முன்தினம் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதில், ராயம்பாளையம், சின்னேரிபாளையம், கருமாபாளையம் உட்பட பல கிராமங்களில் பயிரிடப்பட்டு, அறுவடை செய்ய தயாராக இருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15,000த்துக்கும் மேற்பட்ட செவ்வாழை மற்றும் நேந்திரன் வகை வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து விழுந்தன.
தோட்டக்கலை மற்றும் வருவாய் துறையினர் முறிந்து விழுந்த வாழை மரங்களின் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.
வாழை பயிரிட்டிருந்த விவசாயிகள் கூறுகையில், 'இன்னும் இரண்டு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஜின்டால் வகை நேந்திரன், செவ்வாழை ரகம் ஆகிய வாழை, குலை தள்ளிய நிலையில் முறிந்து விழுந்து சேதம் ஆகி உள்ளது. இதனால், கிட்டத்தட்ட, 50 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றனர்.