ADDED : மே 14, 2024 03:58 AM
சென்னை: 'ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு வருமான வரி, புதிய முறைப்படி பிடித்தம் செய்ய வேண்டுமா அல்லது பழைய முறைப்படி பிடித்தம் செய்ய வேண்டுமா என்ற விபரத்தை, நாளைக்குள் சம்பந்தப்பட்ட கருவூலத்தில் தெரிவிக்க வேண்டும்' என, கருவூல கணக்கு துறை அறிவித்துள்ளது.
ஓய்வூதியதாரர் நல சங்கத்திற்கு கருவூல கணக்கு துறை அலுவலகம் அனுப்பியுள்ள கடிதம்:
கருவூல கணக்கு துறை கமிஷனர் அறிவுறுத்தலின்படி, மாதம் 62,500 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு, புதிய வருமான வரி முறைப்படியும், 45,800 ரூபாய்க்கு மேல் பெறுவோருக்கு, பழைய வருமான வரி முறைப்படியும் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
'பான் கார்டு' பதிவு செய்யாதவர்களில், 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு ஓய்வூதியம் பெறுவோராக இருந்தால், 20 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும். எனவே, 'பான் கார்டு' நாளைக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு எந்த முறைப்படி வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து, அதற்குரிய படிவத்தை, சம்பந்தப்பட்ட கருவூலத்தில் வழங்க வேண்டும்.
பழைய வருமான வரியை தேர்வு செய்வோர், கழிக்கப்பட வேண்டிய சேமிப்பு விபரங்களை, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்விபரங்களை, 15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கருவூலத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

