மாணிக்கம் தாகூருக்கு எதிரான மனு மீது ஒரு வாரத்தில் முடிவு
மாணிக்கம் தாகூருக்கு எதிரான மனு மீது ஒரு வாரத்தில் முடிவு
ADDED : ஏப் 26, 2024 01:12 AM
சென்னை:'விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை, தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது, தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் முடிவெடுக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக, மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவரான சசிகுமார், தாக்கல் செய்த மனு:
தேர்தலின் போது, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் ஏஜென்ட்கள், கூட்டணி கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர்.
பணம் பட்டுவாடா தொடர்பாக, அவரது ஏஜென்ட்கள் காமராஜ், சீனி, கருப்பையா, பாண்டி உள்ளிட்டோருக்கு எதிராக, விருதுநகர், மதுரை போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தும், வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் இல்லை.
தேர்தல் விதிமுறைகளை மீறியதால், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. என் மனுவின் அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை, தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 'தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனு மீது, ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும்' என, ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.

