ADDED : ஏப் 29, 2024 12:38 AM

இ-காமர்ஸ் தளங்களின் மூலம் ஷாப்பிங் செய்வது பிரபலமாக இருந்தாலும், ஆடைகள் என்று வரும் போது, பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள் கடைகளில் இருந்து நேரடியாக வாங்குவதை அதிகம் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியர்களின் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் பற்றிய அறிய, லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், நாட்டின் 322 மாவட்டங்களில் 35,000த்திற்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், நான்கு சதவீதம் பேர் மட்டுமே ஆன்லைனில் ஆடைகள் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 47 சதவீதம் பேர் நேரடியாக கடைக்கு சென்று வாங்குவதை விரும்புவதாக கூறியுள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 40 சதவீதத்தினர் இரண்டும் கலந்த முறையில் ஆடைகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் ஆடைகள் வாங்க தள்ளுபடி முதன்மை காரணமாக அமைகிறது. எனினும், ஆடைகளை கைகளால் தொட்டு பார்த்து வாங்குவதை பலரும் விரும்புகின்றனர்.
நகர்ப்புற இளம் தலைமுறையினர் வேகமான மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் பேஷன் பிராண்ட்களை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். சமூக ஊடக போக்குகளும் இதில் தாக்கம் செலுத்துகின்றன. எனினும், கடைகளோடு ஒப்பிடும் போது ஆன்லைன் விற்பனை ஒற்றை இலக்கமாகவே இருப்பது தெரியவந்துள்ளது.

