சிறுதொழில்கள் ஏற்றுமதிக்கு வாங்குவோர், விற்போர் சந்திப்பு
சிறுதொழில்கள் ஏற்றுமதிக்கு வாங்குவோர், விற்போர் சந்திப்பு
ADDED : நவ 03, 2025 11:52 PM

சென்னை:  தமிழகத்தில் தோல், ஜவுளி, உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு உதவ, ஈரோடில் இம்மாதம், 14, 15ல் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியை தமிழக அரசு நடத்துகிறது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, வெளிநாடுகளில் தேவை இருந்தும் ஏற்றுமதி செய்வதற்கான வழி பலருக்கு தெரிவதில்லை.
எனவே, வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து, சிறு நிறுவ னங்களின் தயாரிப்புகளை வாங்குவதற்கு வழி செய்யும் வாங்குவோர், விற் போர் சந்திப்பு நிகழ்ச்சியை, 'பேம் டி.என்' எனப்படும் தமிழக அரசு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, ஈரோடில் இம்மாதம் 14, 15ம் தேதிகளில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இதில், வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பது, உணவு பதப்படுத்தும் தொழில், ஜவுளி, ஆயத்த ஆடைகள், கயிறு, தோல் பொருட்கள் தயாரிக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்று, தயாரிப்புகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்கலாம்.
இதில் பங்கேற்க விரும்புவோர், 'https://go.fametn.com/rbsmerode2025' என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விபரங்களை, 044 - 29530112, 044 - 29530113 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம்.

