டோக்கியோவில் ஜவுளி கண்காட்சி திருப்பூருக்கு ஆர்டர்கள் வர வாய்ப்பு பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கணிப்பு
டோக்கியோவில் ஜவுளி கண்காட்சி திருப்பூருக்கு ஆர்டர்கள் வர வாய்ப்பு பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கணிப்பு
ADDED : நவ 12, 2025 11:11 PM

திருப்பூர்: ஜப்பானில் நடக்க உள்ள, 'இந்தியா பேஷன் அண்டு லைப் ஸ்டைல்' கண்காட்சியில் பங்கேற்று, புதிய ஆர்டர்களை வசமாக்கலாம் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாடு கவுன்சிலான ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
உலக அளவிலான, ஆடை ஏற்றுமதி சந்தையில், ஜப்பான் முற்றிலும் மாறுபட்ட எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியது.
அந்த நாட்டை பொறுத்தவரை, கடந்த, 2020ம் ஆண்டில், 2.03 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆடை இறக்குமதி செய்தது. 2022ல், இது 2.15 லட்சம் கோடியாக அதிகரித்தது. பிறகு, 2023ல், 2.03 லட்சம் கோடியாகவும், 2024ல், 1.94 லட்சம் கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.
இந்தியாவில் இருந்து, 2020ம் ஆண்டு 1,895 கோடி ரூபாய்; 2021ல் - 1,909 கோடி, 2022ல் - 2,004 கோடி, 2023ல் -1,960 கோடி, 2024ல் - 2,021 கோடி ரூபாய் அளவுக்கு, ஜப்பானுக்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது.
இருப்பினும், ஜப்பானின் ஆடை இறக்குமதியில், இந்தியா ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
சீனா, 95,242 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்து, 49 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா, 2,021 கோடிக்கு ஏற்றுமதி செய்து, ஒரு சதவீத பங்களிப்புடன் இருக்கிறது.
இதன்காரணமாக, ஜப்பானுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த, டெக்ஸ்டைல் கமிட்டி வாயிலாக, மத்திய அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2026 ஜன. 28, 29, 30 ஆகிய தேதிகளில், 'இந்தியா பேஷன் அண்டு லைப் ஸ்டைல்' கண்காட்சி நடக்க உள்ளது.
இதில், பங்கேற்பதன் வாயிலாக, இந்திய ஏற்றுமதியாளர்கள், புதிய ஆர்டர்களை வசப்படுத்த வாய்ப்புள்ளதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்றுள்ளது.

